முதல்வர் பிப்லப் தேவ் 
இந்தியா

சாலையில் நடைபயிற்சி சென்றபோது திரிபுரா முதல்வரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி: பாதுகாவலர் படுகாயம், 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மாலையில் நடை பயிற்சி சென்ற போது, அவர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். எனினும், பாதுகாவலர்களில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மாநிலத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த இடதுசாரி கட்சிகளை வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதன்பின், முதல்வராக பிப்லப் தேவ் பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை வழக்கம் போது அவர் நடை பயிற்சி மேற்கொண்டார். அவரது அரசு இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி லேன் பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். உடன் பாதுகாவலர்கள் சிலரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஒரு கார் முதல்வர் பிப்லப் தேவ் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. பாதுகாவலர்களை தாண்டிக் கொண்டு வேகமாக கார் வரும் சத்தம் கேட்டு உடனடியாக சாலையோரம் பிப்லப் தேவ் குதித்தார். அதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். ஆனால், கார் அதே வேகத்தில் முதல்வரை கடந்து சென்றது. கார் வேகமாக வருவதை பார்த்த பாதுகாவலர், அதை நிறுத்த முயற்சித்தார். எனினும் கார் வேகமாக கடந்து சென்ற போது கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை இரவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது முதல்வரை கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பி.பி.பால் உத்தரவிட்டார். அதன்பின் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அரசு உதவி வழக்கறிஞர் பித்யூத் சூத்ரதார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும். அவர்களுடைய நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்த 2 நாட்கள் போலீஸ் காவல் வேண்டினோம். ஆனால், ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, சிறையில் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலையில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோ மோதி இறந்தார். அவரை திட்டமிட்டு கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் தேவ் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- பிடிஐ

SCROLL FOR NEXT