நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வாரம் மட்டும்8 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது வாரத்தை விட 3-வது வாரத்தில் அலுவல் பணிகள் அதிகரித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன. இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.
ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது.
இதில் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கரோனா சூழல் குறித்து குறுகிய நேரம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை மாநிலங்களவையில் 12 மசோதாக்கள் நிறைவேறி யுள்ளன. 3-வது வாரத்தில் மட்டும் 8 மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன.
80-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளனர். கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் 197 மணி நேரம், 153 சிறப்பு கவன ஈர்ப்பு ஆகியவை கூச்சல்-குழப்பம், அமளியால் வீணானது.
அதேநேரத்தில், கடந்த வாரத்தில் மாநிலங்களவையின் செயல்பாடு 13.70 சதவீதத்தில் இருந்து 24.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் வாரத்தில் 32.20 சதவீதசெயல்பாடு இருந்தது. ஒட்டுமொத்தமாகக் கடந்த 3 வாரங்களில் மாநிலங்களவையின் செயல்பாடு சராசரியாக 22.60 சதவீதமாக இருந்தது.
கடந்த 3 வாரத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த 68 எம்.பி.க்கள் அவை விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளனர். மசோதாக்களை நிறைவேற்ற அவையில் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் செலவிடப்பட்டது. 28 மணி நேரம் 30 நிமிடங்கள் கடந்த வாரம் இருந்த நிலையில் அதில் கேள்வி நேரத்தில் ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் 17 நட்சத்திரக் குறியீடு செய்யப்பட்ட கேள்விகளுக்கு வாய்மொழியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். 17 மணி நேரம் 36 நிமிடங்கள் அமளி காரணமாக அவை வீணடிக்கப்பட்டது.