பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் டி.ஜே.ஆப்ரஹாம், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகனுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் ''கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, உறவினர்கள் விருப்பாக்ஷா மரடி, சசிதர் மரடி, சஞ்சய், அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 8 பேரும் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதில் ஊழல் செய்தனர்'' என தெரிவித்திருந்தார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம் மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜே.ஆப்ரஹாம் கூறும்போது, ''எடியூரப்பா தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. எனவே நீதிமன்றம் அவரை விசாரிக்க வேண்டும்'' என கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ''எடியூரப்பா, விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.