மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபின், பிரதமர் மோடி, அடுத்த வாரம் புதிய அமைச்சர்களுடன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து 3 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் எதிர்காலத் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டம் வரும் 10-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் வரை நடக்க வாய்ப்பிருப்பதாகவும், செயல்திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறைவாரியாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை விரிவாக்கம், புதிய அமைச்சர்கள் சேர்ப்புக்குப் பின் பிரதமர் மோடி நடத்தும் மிகப்பெரிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
மத்திய அரசில் உள்ள மூத்த அமைச்சர்கள் கூறுகையில், “அடுத்த வாரத்தில் அனைத்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி 3 நாட்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கான செயல் திட்டங்களுடன் வருமாறு அனைவரையும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தில்தான் இந்தக் கூட்டம் நடக்கிறது” எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “மக்களுக்குத் தேவையான எதிர்காலத் திட்டங்கள், எளிமையாக வாழ்க்கையை நடத்திச் செல்லத் தேவையான திட்டங்கள், நலத்திட்டங்கள், அரசின் எதிர்கால நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.
குறிப்பாக அடுத்த 3 ஆண்டுகளுக்கான மத்திய அரசின் செயல்திட்டம், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஊக்கப்படுத்துவது, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழலையும், சவால்களையும் சமாளிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். பல்வேறு மாநிலங்களில் அடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அந்த மாநில மக்களுக்கான திட்டங்கள், மக்களைக் கவரும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம்.
மத்திய அரசில் ஒவ்வொரு அமைச்சகமும் குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அரசு எதிர்பார்க்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் எதிர்பார்ப்பு என்ன, எவ்வாறு செயலாற்றுவது, திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம். இதற்கிடையே பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப அமைச்சர்கள் திட்டங்களைத் தயாரித்து வருவார்கள்” எனத் தெரிவிக்கின்றன.