இந்தியா

‘‘பாஜக வெற்றி பெறும்’’- பழக்க தோஷத்தில் புகழ்ந்த முகுல் ராய்

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் கூறியதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாஜகவில் இருந்து விலகி அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தநிலையில் பேசிய அவர் தனது தவறை உடனடியாக சரி செய்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியானது.

கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் இருந்து வந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து முகுல் ராய் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணாநகர் வடக்கு உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுபற்றி கொல்கத்தாவில் முகுல் ராய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். திரிபுராவிலும் வெற்றி பெறும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’’ எனக்கூறினார்.

இது செய்தியாளர்களை மட்டுமின்றி அங்கிருந்த திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனடியாக தனது தவறை புரிந்து கொண்ட முகுல் ராய் பின்னர் அதனை சரி செய்தார். ‘‘இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பாஜக தோல்வியை சந்திக்கும். திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறுவதுடன், திரிபுராவிலும் தனது கணக்கை தொடங்கும். மாநிலத்தில் பாஜக எங்கும் இல்லை. அக்கட்சி அழிக்கப்பட்டுவிட்டது. மாநிலத்தை மம்தா தொடர்ந்து ஆட்சி செய்வார்’’ என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறுகையில் ‘‘கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதி மக்களை முகுல்ராய் ஏமாற்றிவிட்டார். அவர் மீது இருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். மனதில் இருக்கும் அவர், தற்போது தெரியாமல் உண்மையை பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT