இந்தியா

கரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது: பிரதமர் மோடி பேச்சு

ஏஎன்ஐ

கரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர், மத்தியப் பிரதேசத்தில் அதிகமான மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த துயரமான நேரத்தில், மத்திய அரசும் நாட்டு மக்களும் மாநிலத்துடன் துணை நிற்கிறது என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

கடந்த 100 ஆண்டுகளில் மனிதகுலம் கண்டிராத மோசமான பேரிடரை கரோனா ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசு ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாக இருக்கட்டும் அல்லது பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனாவாக இருக்கட்டும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டே நாங்கள் திட்டங்களை வகுத்தோம்.

கரோனா நெருக்கடி தொடங்கியதிலிருந்து இதுவரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 கோடி பயனாளிகள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அரிசி, கோதுமை மற்றும் பருப்புகள் மட்டுமல்லாமல், ஊரடங்கு காலத்தில் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 20 கோடிக்கும் அதிமான பெண்களுக்கு, ரூ.30 ஆயிரம் கோடி பணம் அவர்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

கரோனா பேரிடரால் உலகம் முழுவதுமே மக்களின் வாழ்வாதாரம் பிரச்சினைக்குள்ளான போதும், இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதற்காக கடந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவை கடைபிடிக்கப்படுகின்றன. சிறு, குறு தொழில்களுக்கு லட்சம் கோடிகளில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

SCROLL FOR NEXT