இந்தியா

ஹாக்கி விளையாட்டுக்கு கைகொடுக்கும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்

செய்திப்பிரிவு

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றிக்கு ஒடிசா மாநில அரசு பெருமளவில் உதவியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் ஹாக்கி வீரர்கள் உருவாகியுள்ளனர். சமீப காலங் களில் ஒடிசாவில் இருந்து அதிகளவில் ஹாக்கி வீரர்கள் உருவாகி வருகின்றனர். இதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முக்கிய காரணமாக இருக்கிறார்.

கடந்த 2018-ல் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்வதாக ஒடிசா மாநில அரசு அறிவித்தது. இரு அணிகளையும் சேர்த்து 5 ஆண்டுகளுக்கு ஸ்பான் சர் செய்வதற்காக ரூ.150 கோடியை ஒடிசா அரசு ஒதுக்கியது. இதன்மூலம் புத்துணர்வு பெற்ற இந்திய ஆடவர், மகளிர் அணியினர் ஒலிம்பிக் ஹாக்கியில் சாதித்துள்ளனர்.

மேலும் 2014-ம் ஆண்டிலேயே கலிங்கா லேன்சர்ஸ் என்ற உள்ளூர் ஹாக்கி அணியை ஒடிசா அரசு உருவாக்கியது. இந்த அணி ஹாக்கி இந்தியா லீக் விளையாட்டில் பங்கேற்றது. இதன்மூலம் அங்கு அதிக அளவில் ஹாக்கி வீரர்கள் தேசிய அளவில் உருவாகியுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஒடிசாவைச் சேர்ந்த பிரேந்திரா லக்ரா, அமித் ரோஹிதாஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றதும் உடனடியாக வாழ்த்து தெரிவித்தார் நவீன். ‘‘உங்கள் வெற்றியால் தேசம் முழுவதுமே உற்சாகம் அடைந்துள்ளது. ஒடிசாவும் இதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளது” என்றார். மேலும் வீடியோ கால் மூலம் பேசி இந்திய வீரர்களுக்கு வாழ்த்தையும் அவர் தெரிவித்தார்.

ஹாக்கி வீரர்களுக்காக புவனேஸ்வரில் கட்டப்பட்டுள்ள கலிங்கா ஸ்டேடியம், நாட்டில் உள்ள மிக நவீன ஹாக்கி ஸ்டேடியங்களுள் ஒன்றாகும். இந்த மைதானத்தில்தான் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி, உலக லீக் ஹாக்கி, புரோ லீக் ஹாக்கி, ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

2023 உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியை நடத்தவும் முன்வந்துள்ளார் நவீன். ரூர்கேலாவில் உலகத் தரத்திலான ஹாக்கி ஸ்டேடியத்தையும் கட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதர விளையாட்டுகளுக்காக சுந்தர் கர் நகரில் 17 ஸ்டேடியங்களையும் ஒடிசா கட்டி வருகிறது.

இதுபோன்ற செயல்பாடுகளால் நவீன் பட்நாயக்குக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு கள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT