மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக சார்பில் மணிப்பூரில் முதல்வர் பதவி வகிக்கும் என்.பிரேன் சிங் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர் பிரேன் சிங் நேற்று கூறியதாவது:
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மணிப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ‘‘ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னர் அமெரிக்காவில் சிகிச்சை பெறவும், பயிற்சி எடுக்கவும், பிரதமர் மோடி அலுவலகம் நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகள் செய்ததாக மீராபாய் என்னிடம் தெரிவித்தார். அதை கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, மீராபாய்க்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தேன். அதை கேட்டு பிரதமர் புன்னகைத்தார். தசை அறுவை சிகிச்சை, முதுகு வலி பிரச்சினைக்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுக்க பிரதமர் மோடி உதவி செய்திருக்காவிட்டால், ஒலிம்பிக்கில் இந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது என்று மீராபாய் என்னிடம் கூறினார். பிரதமர் உதவி செய்ததை அறிந்து மணிப்பூர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீராபாய் தவிர மற்றொரு தடகள வீரருக்கும் பிரதமர் மோடி உதவி செய்திருக்கிறார். அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை. இதை பிரதமர் மோடி எந்த இடத்திலும் ஒரு முறை சொல்லி காட்டவில்லை. இதுதான் தலைவருக்கான அழகு.
இவ்வாறு முதல்வர் பிரேன் சிங் கூறினார். - பிடிஐ