மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் 90 கோடி பேர் பயன் பெறுவதாகவும், டிஜிட்டல் மயத்தால் 7 ஆண்டுகளில் 24 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2 லட்சம் கோடி) அளவுக்கு சேமிக்க முடிந்துள்ளதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ஜி 20 நாடுகளின் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் இத்தாலியின் ட்ரீஸ்டே நகரில் நடந்தது. இதில் எழுச்சியுடன் கூடிய வலிமையான, நிலையான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய மீட்புக்கான டிஜிட்டல் மயமாக்கல் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அரசில் அதிக ஒத்துழைப்புடன் செயல்படுவதாக இந்த கூட்டத்தில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.
காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், இந்திய குழுவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார்.
டிஜிட்டல்மயமாக்கத்தில் இந்தியாவின் வெற்றிக் கதையை அவர் பகிர்ந்துக் கொண்டார். இத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம், கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சமூக மேம்பாட்டில் சாதித்த மாற்றங்களை அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:
1.29 பில்லியன் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 430 மில்லியன் ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கியது. இரண்டையும் இணைத்து, மக்களுக்கு அரசின் நிதியுதவிகளை எந்த கசிவும் இல்லாமல் நேரடியாக வழங்கப்படுகிறது.
மக்கள் சுமார் 900 மில்லியன் பேர் அரசின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நலத்திட்டங்களின் பயன்களை பெறுகின்றனர். இந்த டிஜிட்டல் மயமாக்கம், சாதாரண மக்களை மேம்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் கடந்த 7 ஆண்டுகளில் 24 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சேமிக்க வழிவகுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்தொற்று சமயத்தில், டிஜிட்டல் நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வலுவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதை பகிர்ந்து கொண்டார். ஆதார் அடையாள அட்டை, இந்திய மக்களின் தனிச்சிறப்பான டிஜிட்டல் அடையாளமாக இருப்பதாகவும், மானிய உதவிகளை எங்கு வேண்டுமானாலும் வெளிப்படையான முறையில் பெறுவதற்கு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க, சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணையதளத்துக்கு ஜி20 நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டிஜிட்டல் மயமாக்கல் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிவருவதை, இந்த ஜி20 கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பகிர்ந்து கொண்டனர்.