தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாருக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “கண்ணய்ய குமாருக்கு ஆதரவாக வாதாடத் தயாராக இருக்கிறேன். நான் பொதுவாக உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்குகளில் வாதாடி வருகிறேன், தேவை ஏற்பட்டால் கண்ணய்ய குமாருக்காக வாதாடத் தயார். அவர் ஒரு அருமையான மாணவர் சங்கத் தலைவர், அவரை தவறாக இதில் குற்றம்சாட்டியுள்ளனர்” என்றார்.
பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தொடங்கிய ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பு ஜே.என்.யூ. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
கண்ணய்ய குமாரை விடுதலை செய்க: சத்ருகன் சின்ஹா
பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கூறும்போது, “கண்ணய்ய குமார் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று கருதுகிறேன். கண்ணய்ய குமார் பேசியதை வாசித்தேன், அதில் நாட்டுக்கு எதிராகவோ, அரசியல் சாசனத்துக்கு எதிராகவோ எதுவும் இல்லை.
ஜே.என்.யூ. இந்தியாவின் பிரகாசமான இளம் மாணவர்களை உருவாக்கும் இடம் மற்றும் மரியாதைக்குரிய ஆசிரியர்கள் அங்கு இருக்கிறார்கள் என்றால் அந்தப் பல்கலைக் கழகத்தை மேலும் தர்மசங்கடத்துக்குள் ஆழ்த்துவதை தவிர்க்க வேண்டும், பல்கலை.யைக் காப்பாற்ற வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினால், அதனை உண்மையான தரவுகளுடன் நிரூபிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஜவகர்லால் நேரு பல்கலை. தற்போது நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. சர்வதேச பெருமை வாய்ந்த பல்கலைக் கழகமாகும் அது. இதற்கென பெருமைமிக்க வரலாறு உள்ளது” என்றார் சத்ருகன் சின்ஹா.