கள்ளச்சந்தை வியாபாரிகள், பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரைவு நீதிமன்றங்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பருவமழை எதிர்பார்த்தபடி அமையாதது, பண வீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்திட தற்காலிக செயல் திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு அவசியம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பருவமழையின் போக்கு, பணவீக்க நிலவரம் பற்றி தமது அமைச்சரவை சகாக்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
பருவமழை போதிய அளவில் பெய்யாவிட்டாலும் அதனால் வேளாண் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. அதை உறுதிப்படுத்த விவசாயிகளுக்கு போதிய பாசன வசதி, மின்சாரம், விதை வினியோகத்துக்கு ஏற்பாடு செய்திடல் வேண்டும்.
பருவமழை இப்போதைக்கு குறைந்து போனாலும் அடுத்த இரு மாதங்களில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. பண வீக்கத்தை (விலைவாசி உயர்வு) கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விளைவு சாதகமாக உள்ளது.
500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வேளாண் அமைச்சகம் சிறப்பு செயல் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த பருவமழை காலத்துக்கான செயல் திட்டங்களை அமல்படுத்து வதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு முயற்சி அவசியம். இந்த முயற்சி மாநிலங்கள் அளவில் இல்லாமல் மாவட்டங்கள் நிலையில் இருப்பது சிறந்தது.
கள்ளச்சந்தை வியாபாரிகள், பதுக்கல்காரர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.
விலைவாசியை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் சாதகமான பலனை கொடுப்பது தெரிகிறது. சந்தைகளில் அரிசி இருப்பு போதிய அளவில் உள்ளன. கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை நீர் சேகரிப்புக்கு சிறந்த நடைமுறைகளை கையாள்வதும் நீராதாரங்களை முழுமையாக பயன்படுத்திடவும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு இந்த கூட்டத்தில் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. உள்துறை, நிதி, வேளாண்மை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரம், நீர் ஆதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய பின் ஜூன் 17 வரையில் நாட்டில் வழக்கத்தைவிட மழை அளவு 45 சதவீதம் குறைந்து இருந்தது. இந்த ஆண்டில் மழை 93 சதவீதம் அளவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விலை அதிகரித்து வருவதால் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் மே மாதத்தில் 5 மாதத்தில் அதிக அளவாக 6.01% ஆக உயர்ந்தது.