இந்தியா

திரிணமூல் எம்.பி.யை கண்டித்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் எச்சரிக்கையை மீறி அவரது இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நடத்தை குறித்து மாநிலங்களவையில் நேற்று அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “மாநிலங்களவை புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் எம்.பி.க்களில் ஒருவர் அவைக்குள் நுழைய முயன்றுள்ளார். அவரை அவைக் காவலர்கள் தடுத்தபோது, அந்த எம்.பி. கதவின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த விவகாரம் அவைத் தலைவரின் ஆய்வில் உள்ளது” என்றார்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுந்து, “தூய்மைப் பணிக்காக அவை மூடப்பட்டிருந்த நேரத்தில் அந்த எம்.பி. நுழைய முயன்றுள்ளார். கண்ணாடியை உடைத்து, பாதுகாப்பு ஊழியரை காயம் அடையச் செய்ததை ஏற்க முடியாது” என்றார்.

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “போராட்டம் தவறல்ல. ஆனால் வன்முறை தவறு. பாதுகாப்பு ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்டது தவறு” என்றார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT