இந்தியா

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகம் அரசியல் செய்கிறது: கர்நாடக முதல்வர் பசவராஜ் குற்றச்சாட்டு

இரா.வினோத்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் கூறியதாவது:

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்ட வாறு மேகேதாட்டு திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவோம். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என நம்பிக்கை இருக்கிறது.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மேகேதாட்டுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேகேதாட்டு திட்டத்தை வைத்து தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் அரசியல் செய்கின்றன. அரசியல் காரணங்களுக்காகவே இந்த திட்டத்தை எதிர்க்கின்றன.

இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை முடிவுக்கு வரும். பெங்களூரு மாநகரத்துக்கு குடிநீர், மின்சாரம் கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவேன். அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT