இந்தியா

காரீயம், மோனோசோடியம் குளூட்டமேட்டுக்குப் பிறகு தற்போது நூடுல்ஸில் சாம்பல்

பிடிஐ

மேகி நூடுல்ஸ் பிரச்சினைகள், சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு தற்போது உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் நூடுல்ஸ் விவகாரம் வெடித்துள்ளது.

நார் சூப்பி நூடுல்ஸ், ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ் நூடுல்ஸ், மற்றும் சிங் ஹாட் கார்லிக் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஆகியவற்றில் சாம்பல் சத்தின் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து பாரபங்கி மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சிங் கூறும் போது, “நார் சூப்பி நூடுல்ஸ், ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ் நூடுல்ஸ், சிங்கின் ஹாட் கார்லிம் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை கடந்த ஆண்டு மே மாதம் நகர மால் ஒன்றிலிருந்து திரட்டினோம், அதனை சோதனை செய்ததன் அறிக்கை 15 நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த மாதிரிகள் லக்னோவில் உணவு ஆய்வு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப் பட்டன. இதில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டியில் சாம்பல் உள்ளடக்கம் அது இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. எனவே இது தரமற்ற நூடுல்ஸ்.

சாம்பல் சத்து 1% வரை இருக்கலாம், ஆனால் இந்த நூடுல்ஸ் மாதிரிகளில் சாம்பல் அளவு 1.83% இருந்தது. அதாவது சிங் நூடுல்ஸில் 1.83%, ஹார்லிக்ஸின் ஃபூடுல்ஸ் நூடுல்ஸில் 2.37%, சூப்பி நூடுல்ஸில் 1.89% சாம்பல் அளவு உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய இந்நிறுவனங்களுக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேகி நூடுல்ஸின் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் (அஜினமோட்டோ) அதிக அளவில் இருந்தது சர்ச்சைக்குள்ளாகி, நெஸ்லே நிறுவனம் அனைத்து நூடுல்ஸையும் சந்தையிலிருந்து திரும்பப் பெற்று அழித்தது.

அதன் பிறகு கடந்த நவம்பரில் மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தைக்கு வந்தது.

இந்நிலையில் 3 நிறுவனங்களின் நூடுல்ஸில் சாம்பல் சத்து அளவுக்கு அதிகமாக உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT