சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில்பாதை திட்டத்தின் கீழ் சென்னை - டெல்லி இடையே புதிய சரக்கு ரயில்பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:
* நாட்டின் மிகப் பெரிய கட்டமைப்புத் திட்டமான சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்து திட்டமானது வேகமெடுத்துள்ளது. டெல்லி - சென்னையை இணைக்கும் வடக்கு - தெற்கு பாதை; கரக்பூரிலிருந்து மும்பையை இணைக்கும் கிழக்கு - மேற்கு வழி தடம்; கரக்பூரை விஜயவாடாவுடன் இணைக்கும் கிழக்குக் கடற்கரை வழி தடம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
பொது - தனியார் கூட்டு முயற்சி உள்ளிட்ட புதுவகையான நிதிவழங்கல் ஏற்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
அமல்படுத்த அனுமதி வழங்குவது ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மேற்கூறிய இந்த மூன்று திட்டங்களுக்கும் மிக உயர்ந்த முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிதியாண்டு முடிவதற்குள்ளாக இந்த மூன்று வழி தடங்களை கட்டிட பொறியியல் பணிகள் கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுவிடும். இத்துறைக்கு நான் பொறுப்பேற்ற பிறகு, ரூ.24,000 கோடி மதிப்புள்ள பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் ரூ.13,000 கோடி அளவிற்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.
சரக்கு ரயில் போக்குவரத்து தொழிலை மிக வேகமாக விரிவுபடுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சரக்குரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில், சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்திற்கான சிறப்பு வழிப்பாதையை உருவாக்குவது அவசியமாகும். நாட்டின் பொருளாதாரமும் சுற்றுச் சூழலும் இதன் மூலம் பயன் பெறும்.
* நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
* அடுத்த ஆண்டில் புதிதாக 2,800 கி.மீ தூரம் கொண்ட புதிய ரயில்வே இருப்புப் பாதைகள் திறக்கப்படும்.
முதலீடுகள்:
* 2016-17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
* ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
* 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.