பாஜக 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறை, காட்டுமிராண்டித்தனத்தை மத்திய அரசு தொடங்கியது, காஷ்மீர் துக்கத்தில் இருக்கும்போது பாஜக கொண்டாட்டம் ஏன் என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு ஆகும் நிலையில் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு பறித்தது. இன்றைய தினம் இந்த மாநிலம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள நிலையில் காஷ்மீருக்கு தீர்வு கிடைக்க நாங்கள் பணியாற்றுவோம்.
எங்களிடம் இருந்து சட்டவிரோதமாக , ஜனநாயகத்துக்கு விரோதமாக, அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பறிக்கப்பட்டதை நாங்கள் மீண்டும் திரும்பப்பெறுவோம் என நான் உறுதி செய்கிறேன்.
இது சாதாரணமான பணி அல்ல. நாம் செல்லும்வழியில் ஏராளமான தடைகளும், கடினமான விஷயங்களும் இருக்கும். ஆனால் நமது மன உறுதியின் மூலம் வெல்லுவோம்.
மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறை, காட்டுமிராண்டித்தனத்தை தொடங்கியது. காஷ்மீர் துக்கத்தில் இருக்கும்போது பாஜக கொண்டாடுவது துரதிர்ஷ்டவசமானது.
நாங்கள் இதனை எதிர்க்கிறோம். வெளிப்புற அடிப்படையில் பாகிஸ்தானுடனான பிரச்சினைகளை பேசித் தீர்க்குமாறு நாங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்