பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக அவருக்கு ஆலோசகர் பொறுப்பு வகித்து வந்த பிரசாந்த் கிஷோர் அந்த பணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.
பின்னர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது.
பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்தார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே ஒப்புக் கொண்டார். இதனால் இரு மாநில தேர்தல் தொடர்பாக விவாதித்து இருக்கலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக அவருக்கு ஆலோசகர் பொறுப்பு வகித்து வந்தநிலையில் அந்த பணியில் இருந்து விலகிக் கொள்வதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும். பொதுவாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை விலகல் காங்கிரஸுக்கு பின்னடை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.