கோப்புப்படம் 
இந்தியா

பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

ஏஎன்ஐ

இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர்ஸ் கில்ட் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்எல் சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த மனுக்களில், “பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது, ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று ஒருமித்த குரலில் கோரப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏஜென்சி மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ராணுவத்தினர் பயன்படுத்தும் கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்துவது ஏற்கமுடியாது. இது கே.எஸ்.புட்டாசாமி வழக்கில் அரசியலமைப்புச் சட்டம் 14,19,21ன் கீழ் தனி நபரின் அந்தரங்க உரிமைகளை மீறுவதாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், கண்காணிப்புக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தங்கள், யார் யாருக்கு எதிராக ஒட்டுக் கேட்பு செயலி பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தனது மனுவில் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் கண்காணித்தது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்று பிரனாய்ஜாய் குஹா தாக்ருதா உள்ளிட்டோர் தங்களின் மனுவில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT