நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் அக்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, அங்கு வந்த பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் சிங் பிட்டு, ஹர்சிம் கவுர் அருகே சென்று அவரது போராட்டத்தை நாடகம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதிலுக்கு ஹர்சிம்ரத் கவுரும் கேபமாக பதிலளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரவ்நீத் சிங், ‘‘வேளாண் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோது ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சராக இருந்தார். பிறகுதான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது, வேளாண் சட்ட மசோதாவை எதிர்ப்பதாக ஹர்சிம்ரத் கவுரும் அகாலிதளம் கட்சியினரும் நாடகமாடுகின்றனர்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஹர்சிம்ரத் கவுர், ‘‘ வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது ராகுல் காந்தி எங்கு போயிருந்தார் என்று அவர்களைக் கேளுங்கள். வேளாண் சட்டம் நிறைவேற வசதியாக காங்கிரஸ் வெளிநடப்பு செய்து மத்திய அரசுக்கு உதவியது. பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்’’என்று கூறினார்.