கேரளாவில் கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், தொடர்பு தடமறிதல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுமாறு கேரள அரசை வலியுறுத்தியுள்ளனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.
நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு கேரளாவில் 7 மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் திடீரென கரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்த அவர்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும் கேட்டறிந்தனர்.
பின்னர் மத்திய குழுவினர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினர். பின்னர் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய குழு கேரள அரசிடம் வழங்கியுள்ளது.
கேரள அரசுக்கு மத்திய குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில்
கரோனா நெருக்கடியை சமாளிக்க அதிகமான சோதனை, தொடர்பு தடமறிதல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலத்தில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பை நிறுவுவது அவசரகால அவசியம் என மத்திய குழு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகள் போன்ற முறையான மருத்துவமனை உள்கட்டமைப்பு அவசர அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் நல வசதிகள் குறிப்பாக குழந்தை ஐசியு படுக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய குழு கேரள அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.