குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். படம்: பிடிஐ 
இந்தியா

கரோனா ஊரடங்கு காலத்தில் பசியுடன் யாரும் உறங்கவில்லை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் மத்திய அரசின் நடவடிக்கையால் பசியுடன் யாரும் உறங்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை குறைக்கவும் மக்களுக்கு உதவும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடியால் கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டது. இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் பலனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு 5 கிலோவீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்வு குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் நேற்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷனில் இலவசமாகஉணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் பசியுடன் யாரும் உறங்கவில்லை.

நாட்டில் உணவு தானியக் கையிருப்பு அதிகரித்தபோதும் முறையான விநியோக அமைப்புமுறை இல்லாததால் மக்களின் வறுமையையோ ஊட்டச்சத்து குறைபாட்டையோ அது குறைக்கவில்லை.

கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தால் ஏழைகளுக்கு உணவுதானியம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவுக் கவலை நீங்கியது. கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் குஜராத்தில் மட்டும் 3.5 கோடி மக்கள் பலனடைந்துள்ளனர். தீபாவளி வரை இந்த திட்டம் தொடரும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.- பிடிஐ

SCROLL FOR NEXT