டெல்லி போலீஸ் ஆணையராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்ததை எதிர்த்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
இ்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா கடந்த மாதம் 30-ம்தேதி தாக்கல் செய்திருந்தார்.
வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தாக்கல் செய்தமனுவில், “ டெல்லி போலீஸ் ஆணையராக அஸ்தானா நிமியக்கப்பட்டது கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பிராகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது. அந்தத் தீர்ப்பில் காவல் ஆணையர்களை நியமிக்கும்போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையின் டிஜிபியாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை டெல்லி போலீஸ் ஆணையராக ஓர் ஆண்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நியமித்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரின் முடிவு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அரசியலமப்பு நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். இந்த இரு தலைவர்களும் தங்களின் மீதமுள்ள வாழ்க்கையில் அரசியலமைப்புப் பதவியில் தொடரலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன் வழக்கறிஞர் சர்மா, பல பொதுநலன் வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். பெகாசஸ் விவகாரம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல், காஷ்மீர் 370பிரிவு ரத்து ஆகியவை தொடர்பாக சர்மா பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக தொடர்ந்த பொதுநல வழக்கில் சர்மாவுக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
1984-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்எப் பிரிவின் டிஜிபியாகப் பொறுப்பேற்ற நிலையில் இப்போது டெல்லி போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.