இந்தியா

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: அமித் ஷாவை சந்தித்த பசவராஜ் தகவல்

இரா.வினோத்

கர்நாடகாவில் நாளை அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியதை தொடர்ந்து கடந்த 28-ம் தேதி பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் துணை முதல்வர், முக்கிய அமைச்சர் பதவிகளை கைப்பற்றுவதில் மூத்த தலைவர்கள், பாஜக எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. க‌டந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவுக்கு தாவிய 17 எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி கோரியுள்ளதால் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி சென்றார். அங்குபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச்செய லாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து 3 மணி நேரத்துக்கும் மேலாக‌ ஆலோசனை நடத்தினார். மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘கர்நாடகஅமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் இழுபறியோ, காலதாமதமோ ஏற்படவில்லை. மேலிடத் தலைவர்களின் ஆலோசனையின் பேரில்அனைத்து வகையான நடவடிக்கைகளும் வேகமாக நடந்து வருகிறது. சாதி பிரதிநிதித்துவம், மாகாணத்துக்கான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும்.

இன்னும் ஓரிரு நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும். எதிர்பார்த்தவாறு எல்லாம் சுமூகமாக முடிந்தால், ஆகஸ்ட்4-ம் தேதி (நாளை) அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும்''என்றார்.

SCROLL FOR NEXT