ஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதி கொலை தொடர்பாக 17 பேரை போலீஸார் கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் 243 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தார் உத்தம் ஆனந்த். கடந்த புதன்கிழமை காலை நடை பயிற்சி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், நீதிபதி மீது மோதிவிட்டு வேகமாக சென்றனர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் போலீஸாரின் அலட்சியத்தை நீதிமன்றங்கள் கண்டித்தன. அதன்பின், விபத்து என்பதை மாற்றி கொலை வழக்காகப் போலீஸார் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர், கூட்டாளி உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், ஆவணங்கள் முறையாக இல்லாத 250 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் 243 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நீதிபதி மீது ஆட்டோ மோதிச் செல்லும் வீடியோவை பொதுவெளியில் வெளியிட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஜார்க்கண்ட் அரசும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
53 ஓட்டல்களில் சோதனை
இதுகுறித்து மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சஞ்சீவ் குமார் கூறும்போது, ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் 243 பேரை பிடித்து வைத்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அத்துடன் 53 ஓட்டல்களில் போலீஸார் சோதனை நடத்தி 17 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவெடுத்துள்ளார்.