அசாம்- மிசோரம் இடையே எல்லை பிரச்சினையால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அசாம் எம்.பி.க்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இதில் அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகியவை எல்லைப் பகுதிகளைப் பிரிக்கின்றன.
எல்லை தொடர்பான சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது.
அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி ஒரு கரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர். இதற்கு அசாம் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போது அப்பகுதியில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இரு மாநில எல்லையில் மீண்டும் கடந்த 26-ம் தேதி வன்முறை வெடித்தது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்தச் சூழலில் அசாம் மாநில முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலடியாக அசாம் போலீஸாரும், மிசோரம் அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் இரு மாநிலங்கள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் எல்லை பிரச்சினை தொடர்பாக அசாம் எம்.பி.க்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரு மாநில எல்லை பிரச்சினை தொடர்பாக பேச உள்ளார். மேலும் இரு மாநிலங்களும் பதற்றத்தை தணித்துக் கொள்ளவும், அமைதி ஏற்படுத்தவும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொள்வார் எனத் தெரிகிறது.