மாநிலங்களவை துணைத் தலைவரும், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியும் மற்ற சில எதிர்க்கட்சிகளும், ஏதாவது பொய்களை கட்டவிழ்த்துவிட்டு அலறி ஓடிவிடும் கொள்கையைகடைபிடித்து வருகின்றன. அப்படிதான் பெகாசஸ் மென்பொருள் உளவு விவகாரத்தை உள்நோக்கத்துடன் எடுத்துக்கொண்டு பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளன. இதையே காரணமாக வைத்துநாடாளுமன்றத்தின் அரிய நேரத்தை வீணாக்கி வருகின்றன. ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, உளவு பார்க்கும் ஜேம்ஸ் பாண்ட் போல செயல்பட்டதே காங்கிரஸ் கட்சிதான்.
மக்கள் பிரச்சினைகள் குறித்துவிவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடு நீங்கி இரு அவைகளும் சுமூகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்.
முதல் நாள் கரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறினர்.. பிறகுவிவாதம் நடத்த ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பின், விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்றனர். பிறகு அதையும் பேச முன்வரவில்லை. நாட்டின் பல பகுதிகளில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சியினர் மக்கள் துயரங்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து பொய் தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி விவாதம் நடத்த கோரி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர்.
இவ்வாறு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.