நாசிக்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் (டிசிஎஸ்) நாசிக் கிளை அலுவலகத்தில் பயிற்சிக்கு சேரும் ஊழியர்களிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பெண் போலீஸார் துப்புரவு பணியாளர்கள் போல் வேலைக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதில் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டன.
இந்த குற்றச் செயலில் மனித வள பிரிவு மேலாளர் மற்றும் மூத்த ஊழியர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பயிற்சிக்கு வருபவர்களிடம் பணத் தேவை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுடன் மதமாற்ற முயற்சியிலும் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாளர் நிதா கான், ஆசிப் அன்சாரி, சஃபி ஷேக் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பல் பயிற்சிக்கு சேர்ந்தவர்களிடம் இந்து கடவுள்கள் பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவிப்பர். இதனால் மனம் புண்படும் பயிற்சியாளர்களை மனிதவள மேலாளர் நிதா கான் சமாதானம் செய்து அவர்களின் நம்பிக்கையை பெறுவார். இப்படி படிப்படியாக பயிற்சிக்கு சேர்பவர்களின் வாழ்க்கை முறை, உடை அணியும் பழக்கம் ஆகியவற்றை அந்தக் குழுவினர் மாற்றியுள்ளனர். மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள இந்து கடவுள்களின் படத்தை குடும்பத்தினருடன் தகராறு செய்து அகற்றியுள்ளனர்.
மத போதகருக்கு தொடர்பு: பயிற்சி ஊழியர்களை மத மாற்றம் செய்யும் முயற்சியில் மலேசியாவில் இருந்து ஒரு மதபோதகரும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் வாட்ஸ்- ஆப் மூலம் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு 12 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். திருமணம் செய்வதாகக் கூறி பல பெண் ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு மற்றும் மத மாற்றம் நடைபெற்றதாக பயிற்சிக்கு வந்த 8 பெண்கள் மற்றும் ஒரு ஆண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.