புதுடெல்லி: மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உணவு தானிய ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி ஒருவருக்கு மாதம் 7 கிலோ, அதிகபட்சம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை, ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’-ல் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ‘தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ குறித்து ஜூலை 13ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய உணவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி, மிகவும் ஏழ்மையானவர்களாகக் கருதப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்பங்களுக்கு, குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மாறாக, முன்னுரிமைக் குடும்பங்கள் (பிஹெச்) பிரிவினருக்கு ஒருவருக்கு மாதம் 5 கிலோ வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையால், முன்னுரிமைக் குடும்ப உறுப்பினர்களைவிட, பெரிய அளவிலான ஏஏஒய் குடும்பங்களுக்குக் கிடைக்கும் சராசரி தனிநபர் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது.
இது குறித்து உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மிகவும் நலிந்த குடும்பங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் தற்போதைய குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டு முறை, குடும்பத்தின் அளவைப் பொறுத்து குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
புதிய மசோதாவின்படி, 2 உறுப்பினர்களைக் கொண்ட ஏஏஒய் குடும்பத்துக்கு மாதம் 14 கிலோ உணவு தானியம் கிடைக்கும். அதே வேளையில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்கு தற்போதுள்ள அதிகபட்ச வரம்பான 35 கிலோ வழங்கப்படும்.
‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’ன் நோக்கங்களுக்கு இணங்க, மலிவு விலையில் தரமான மற்றும் போதுமான அளவு உணவை உறுதி செய்யும் மனித வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தத் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை இலவசம்: தற்போது, முன்னுரிமைக் குடும்பங்கள் மற்றும் ஏஏஒய் குடும்பங்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.