இந்தியா

‘‘ஜூலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்’’- ராகுல் காந்திக்கு  மாண்டவியா பதிலடி

செய்திப்பிரிவு

ஜூலை மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது முதல் டோஸ் தடுப்பூசியை கடந்த மாதம் 28-ம் தேதிதான் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால்தான் 29 மற்றும் 30-ம்தேதிகளில் அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி வருகிறார். கடந்த ஜூலை 2-ம் தேதி ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ராகுல் காந்தி மீண்டும் பேசியுள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் கடந்துவிட்டது. தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி எங்கே என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஜூலை மாதத்தில் மட்டும் 13 கோடி இந்தியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். ஜூலை மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என நான் கேள்விப்பட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT