இந்தியா

ம.பி.யில் மழையால் சிறைக் கட்டிடம் இடிந்தது: 22 கைதிகள் இடிபாடுகளில் சிக்கினர்

ஆர்.ஷபிமுன்னா

மத்தியப்பிரதேசத்தில் பெய்த மழையால் சிறைச்சாலை கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 22 கைதிகள் சிக்கினர்.

ம.பி. மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது பிந்த் மாவட்டம். இங்கு சில தினங்களாகக் கடும் மழை பெய்ந்து வருகிறது.

இதனால், பிந்தில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பாழடைந்த கட்டிடம் இன்று காலை 5.00 மணிக்கு திடீர் என இடிந்து விழுந்தது. எண் 6 பேரக் சிறையில் மொத்தம் 64 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதில், 22 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் வெளியேறிய போது நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி காயமுற்ற பலரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தகவல் கேள்விப்பட்ட பிந்த் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சதீஷ்குமார்.எஸ் மற்றும் காவல்துறை தலைமை கண்காணிப்பாளரான மனோஜ்சிங் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

இந்த சிறைச்சாலை மிகவும் பழமையானது. இதனுள் மொத்தம் 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டிடம் இடிந்ததன் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கைதிகளை அருகிலுள்ளசிறைச்சாலைக்கு பாதுகாப்பாக மாற்றும் பணியும் துவங்கி உள்ளது.

SCROLL FOR NEXT