இந்தியா

ஆட்டோ ஏற்றி ஜார்க்கண்ட் நீதிபதி கொலை; உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு: 7 நாளில் தலைமை செயலர் அறிக்கை அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், ஒரு வார காலத்துக்குள் முழு அறிக்கை அளிக்க மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த புதன்கிழமை காலை 5 மணியளவில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், திட்டமிட்டு நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று நீதிபதியின் குடும்பத்தார் கூறியுள்ளனர். ஆனால், போலீஸார் கொலை வழக்காக மாற்றுவதற்கு தாமதம் செய்துள்ளனர். இதையடுத்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின், விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி கடந்த வியாழக்கிழமை தன்பாத் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும் அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆட்டோ பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தன்பாத் போலீஸ் எஸ்.பி. சஞ்சீவ் குமார் நேற்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை குறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் போலீஸார் 14 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளனர்.

எனினும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, ஜார்க்கண்ட் நீதிபதி கொலை விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று வழக்குப் பதிவு செய்தது. மேலும், நீதிபதி கொலை குறித்து ஒரு வாரத்துக்குள் முழு அறிக்கை சமர்ப்பிக்க ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதிகளுக்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது, பொதுவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன என்பது உட்பட பல் முக்கிய விவரங்களுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தினந்தோறும் கண்காணித்து வருகிறது. - பிடிஐ

SCROLL FOR NEXT