இந்தியா

ஜேஎன்யூ மாணவர்கள் இருவரை சரணடைய ஐகோர்ட் உத்தரவு; சட்ட நடவடிக்கைக்கு டெல்லி போலீஸ் தீவிரம்

பிடிஐ

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் சரணடைய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

அதேவேளையில், இவ்விருவர் உட்பட தேடப்படும் மாணவர்கள் 5 பேரும் சரணடையவில்லை எனில், உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் டெல்லி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 9-ம் தேதி, நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேச துரோக வழக்கில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அசுதோஷ் குமார், அனந்த் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தலைமறைவாகி பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளனர். எனினும், இவர்களை கைது செய்ய பல்கலைக்கழக ஆசிரியர்கள் அனுமதிக்கவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, காலீத் மற்றும் அனிர்பன் ஆகிய இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் புதன்கிழமை வரை கைது செய்ய தடை விதிக்குமாறும் சரணடயும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் ஆர்.கே.கவ்பா அடங்கிய அமர்வு, இருவரும் தாங்கள் விரும்பும் இடத்தில் புதன்கிழமைக்குள் சரணடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதேநேரத்தில் புதன்கிழமை வரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். மேலும் இதுதொடர்பாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

இதனிடையே, தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பிரதிபா ராணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததது.

அப்போது, டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கண்ணய்யாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை எங்கே? அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. புதன்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

என்ன சொல்கிறது டெல்லி காவல் துறை?

டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, "கண்ணய்யா குமாரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்பதற்கு உரிய காரணங்கள் இருக்கின்றன. அவர் ஜாமீனில் விடுதலையானால் சாட்சியங்களை கலைத்துவிடுவதற்கும் விசாரணை போக்கை வேறு திசையில் திருப்பி விடுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே அவருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கிறோம்" என்றார்.

மேலும், "தேடப்படும் 5 மாணவர்களுக்காக காத்திருக்கிறோம். போலீஸுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். சட்டத்துக்கு அவர்கள் கட்டுப்படவில்லை என்பதை அறிந்தால், சட்ட ரீதியிலான உரிய நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டோம்" என்றார் அவர்.

இதனிடையே, 'தேச துரோக வழக்கில் சிக்கியுள்ள ஜேஎன்யூ மாணவர்களை கைது செய்யும் விவகாரத்தில் டெல்லி போலீஸார் சட்டப்படி செயல்படுவர். உரிய நேரத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ஜெஎன்யூ நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன?

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணய்யாவை விடுதலை செய்ய வேண்டும், தேச துரோக குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என்ற மாணவர்கள், பேராசிரியர்களின் கோரிக்கை எங்களின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜேஎன்யு பதிவாளர் பூபிந்தர் ஜுட்ஷி கூறும்போது, “கண்ணய்யாவை நாங்கள் கைது செய்யவில்லை. யார் மீதும் தேசத் துரோக வழக்கை நாங்கள் பதிவு செய்யவில்லை. இது, காவல் மற்றும் நீதித் துறை சார்ந்த விவகாரம். இந்த இரு கோரிக்கைகளும் எங்களின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை. வளாகத்துக்குள் நுழைவதற்கு காவல் துறை எங்களிடம் இதுவரை அனுமதி கேட்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் தலைமையில் நேற்று நடந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழக வளாகம் திரும்பிய 5 மாணவர்களை கைது செய்ய வளாகத்துக்குள் காவல் துறையை அனுமதிப்பதா அல்லது மாணவர்களை சரணடையச் சொல்வதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். துணைவேந்தரின் அனுமதிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT