இந்தியா

ஓர் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் மறைவால் ஏற்பட்ட காலியிடம்- மத்தியபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸுக்கு சவாலாகும் இடைத்தேர்தல்

ஆர்.ஷபிமுன்னா

ம.பி.யில் கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு தேவைப்பட்ட சில எம்எல்ஏக்களின் ஆதரவு, சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளிடம் பெறப்பட்டது.

எனினும் அடுத்த சில மாதங்களில் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவுடன் கட்சியின் ஒரு பகுதி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.

இதையடுத்து 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தாவியவர்களில் அதிகம் பேர் மீண்டும் தங்கள் தொகுதிகளில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகினர். இந்தச்சுழலில் மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் ஓர் எம்.பி. மறைவு காரணமாக அம்மாநிலத்தில் மீண்டும் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்றாலும் அதன் வெற்றி, தோல்வி அடுத்து 2023-ல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் வரும் இடைத்தேர்தல் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் சவாலாகி விட்டது.

காலியான தொகுதிகளில் கண்டுவா மக்களவைத் தொகுதியும் ராய்காவ்ன், ஜபாட் சட்டப்பேரவை தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தன. பிரிதிபூரில் மட்டுமே பாஜக வென்றிருந்தது.

ராய்காவ்ன் தொகுதியில் கடந்த தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜை தொடர்ந்து பாஜக 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

எனவே இந்த நான்கு தொகுதிகளையும் வெல்வதற்கு பாஜக கடினமாகப் பாடுபட வேண்டியிருக்கும். தோல்வி அடைந்தால் அது எதிர்க்கட்சிகளை உற்சாகம் அடையச் செய்யும். காங்கிரஸ் கட்சிக்கும் தனது தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.

தேர்தல் பணியில் தீவிரம்

இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அதற்கானப் பணிகளில் முதல்வர் சவுகான் இறங்கிவிட்டார். பாஜகவின் தலைமையும் தனது பிரச்சார வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன், 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ம.பி.யின் தமோஹா சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ்வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT