தெலங்கானாவில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மயானங்கள், அதற்கான சாலை,விளக்கு வசதிகளை அம்மாநில அரசு அமைத்து வருகிறது. இது பஞ்சாயத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புதிதாககட்டி முடிக்கப்பட்ட ஒரு மயானத்தை பஞ்சாயத்து துறை அமைச்சர் தயாகர் ராவ், கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். பின்னர் தயாகர் ராவ் கூறியதாவது:
கடந்த கால அரசுகள், கிராமப்புறங்களில் மயானங்கள் கட்டுவதை விரும்பவில்லை. இதற்காக இடம் ஒதுக்கினால் கூட, அது வேறு யாருடையை நிலத்தை ஆக்கிரமித்து அதில் மயான மேடையை மட்டும் கட்டி விட்டுவிடுவார்கள். ஆனால், இந்து சாம்பிரதாயத்தின்படி, உடலை எரிக்கவோ, புதைக்கவோ போதிய இடம் தேவை.
இதையெல்லாம் தற்போதைய சந்திரசேகர ராவ் அரசு செய்துள்ளது. ரூ.1,555 கோடி செலவில் மாநிலம் முழுவதிலும் உள்ள 12,769 கிராம பஞ்சாயத்துகளில் மயானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் இதுவரை 12,455 மயானங்கள் கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளன.
இவ்வாறு தயாகர் ராவ் கூறினார்.