யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கூட்டம் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கத்தார் தலைநகர் தோஹாவில் நடக்கிறது.
இதில் மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படும் என்கின்றனர் இமயமலையை ஆய்வு செய்து வரும் சூழலியலாளர்கள்.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, சுந்தரவனக் காடுகள், அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா, மானாஸ் வன விலங்குகள் சரணாலயம், உத்தர கண்ட்டின் நந்தாதேவி மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகியவை யுனெஸ்கோவின் இயற்கை பாரம்பரியச் சின்னங் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோவின் இயற்கை சார்ந்த தேசியப் பாரம்பரிய சின்னங்களுக்கான விதிமுறைப் பட்டியல் 10-ன் படி “நீடித்த இயற்கை மற்றும் உயிரி பல் வகைமை (Bio - diversity) அடர்த்தி மிகுந்த பகுதிகள் அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிற அடிப்படையில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்படவிருக்கிறது.
கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்கா 1999-ம் ஆண்டு தேசியப் பூங்காவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 754.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் சன்ஜ் (sainj) மற்றும் தீர்த்தன் (Tirthan) ஆகிய இரு வன விலங்குகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்த பூங்காவின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் பனி மலை முகடுகளே பியாஸ் நதி மற்றும் அதன் துணை நதிகளான பார்வதி, சன்ஜ், தீர்த்தன், ஜூவானல் ஆகியவற்றுக்கு நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானியும் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் தேர்வு கமிட்டி - கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ரமேஷ், “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் ஆகியவை கடந்த இரு ஆண்டுகளாக கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
உலகளாவிய ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங் கள் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் சாலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது. மனித நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அழிந்து வரும் அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் பனிக்கரடி, பனிச்சிறுத்தை, ஆசிய கருப்புக் கரடி ஆகியவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சிகப்புப் பட்டியலில் இருக்கும் அழிந்துவரும் 25 அரிய வகைத் தாவரங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் வட இந்தியாவின் பெரும்பகுதிக்கு நீர் ஆதாரங்களை தரும் பனிமுகடுகள் இந்த தேசிய பூங்காவிலும் அதனை ஒட்டியப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
இவற்றை எல்லாம் தகுந்த ஆதாரங்களுடன் யுனெஸ்கோ அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளோம். யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்யும் குழுவினர் மேற்கண்ட ஆதாரங்களை உறுதி செய்ததுடன் மேற்கு இமயமலை மற்றும் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவுக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தியும் தகவல்களை உறுதி செய்துள்ளனர். இப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படும் என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தோஹாவில் நடக்கவுள்ள கூட்டத்தில் யுனெஸ்கோவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ வினய் ஷீல் ஓபராய், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்” என்றார்.
யுனெஸ்கோ தேர்வுக்குழுவில் 21 நாடுகள்
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர். தற்போது நடக்கவிருக்கும் 38-வது தேர்வு கமிட்டி கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவுடன் போட்ஸ்வானா நாட்டின் 'ஒகேவாங்கோ டெல்டா, பிலிப்பைன்ஸின் மெட் ஹமிகியூட்டன் வன விலங்குகள் சரணாலயம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தின் வேடன் கடல் (wadden sea) உட்பட சுமார் 10 வகை இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட இருக்கின்றன. தவிர குஜராத் பாட்டன் டவுனில் இருக்கும் ராணி கிவ் வாவ் பகுதி (Rani-ki-vav - The Queen's Stepwell) கலாச்சாரம் சார்ந்த உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட இருக்கிறது.