மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் தீபக் பாஜ்பாய் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக கடந்த 1999 முதல் 2013-ம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார் என ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதே கருத்தை அவரது கட்சியை சேர்ந்த ஐந்து பேர் வெளியிட்டனர்.
இதனால் ஆவேசமடைந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சதா, குமார் விஷ்வாஸ், அஷுதோஷ் சஞ்ஜய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகிய ஐந்து பேருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் தீபக் பாஜ்பாய் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பூல்கா, ‘அருண் ஜெட்லி தொடர்ந்துள்ள இந்த அவதூறு வழக்கில் மனுதாரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவருக்கு எதிராக எந்த வாக்குமூலமும் அளிக்கப்படவில்லை. எனவே இவ்வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்’என வாதாடினார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வாதாடிய அருண் ஜெட்லி வழக்கறிஞர் ராஜீவ் நாயர், ‘‘தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் சதி செய்யும் நோக்கத்துடன் அவதூறான வகையில் அவர்கள் பேசியிருப்பதாக இவ்வழக்கில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. ஜெட்லிக்கு எதிராக ‘ட்விட்டர்’ மூலம் பாஜ்பாய் தெரிவித்த கருத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
மேலும் உயர் நீதிமன்ற அமர்வும் அவதூறு வழக்கில் தனித்தனியாக பிரதிவாதிகளின் பெயரை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அவசியம் வாதிக்கு இல்லை என தெரிவித்து, தீபக் மிஸ்ராவின் மனுவை தள்ளுபடி செய்தது.