மேகதாது விவகாரத்தில் எங்கள் மாநிலத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது அணைகட்ட தீவிர பணிகள் நடந்தநிலையில் தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.
மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடர்ந்து கூறி வந்தார். இந்தநிலையில் பாஜக மேலிட உத்தரவின்பேரில் எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றார்.
கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையும் மேகதாது விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காவிரியில் கூடுதலாக உள்ள தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தவே மேகதாது அணை கட்டப்படுகிறது.
மேகதாது அணை விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவானது. சட்டரீதியாக நாங்கள் சரியான பக்கத்தில் தான் உள்ளோம்’’ எனக் கூறினார்.