மாயாவதியுடன் சதீஷ் மிஸ்ரா- கோப்புப் படம் 
இந்தியா

சமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக  முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு

ஆர்.ஷபிமுன்னா

பாஜக சமஸ்கிருத மொழியை ஒழிக்க முயல்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா குற்றம் சுமத்தி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நவீனமயமாக்கலின் பேரில் பாதிக்கும் மேற்பட்ட சம்ஸ்கிருதப் பள்ளிகளை மூடி விட்டதாகவும் அவர் புகார் எழுப்பியுள்ளார்.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ் மிஸ்ரா பந்தேல்கண்டின் ஒரு விழாவில் பேசியதாவது:

இந்து மதத்துக்கு ஆதரவானக் கட்சி எனத் தன்னை கூறிக்கொள்ளும் பாஜக, சமஸ்கிருந்த மொழியை உ.பி.யில் ஒழித்து வருகிறது.

நவீனப் பள்ளிகளாக மாற்றுவதன் பெயரில் பாதிக்கும் மேற்பட்ட சமஸ்கிருதப் பள்ளிகளை உ.பி.யில் ஆளும் பாஜக மூடி விட்டது. இதன்மூலம் சம்ஸ்கிருத மொழி வலுவிழக்கத் துவங்கி விட்டது.

இதன் பாதிப்பு நேரடியாக சனாதன தர்மத்திற்கு ஏற்பட்டு வருகிறது. இந்தவகையில் பிராமணர்களையும், வேறுபல வகைகளில் தலித்துக்களையும் பாஜக மாநிலம் முழுவதிலும் நசுக்குகிறது.

பிராமண சமூதாயத்தினர் பொறுக்கி எடுத்து கொல்லப்படுகின்றனர். சித்தரகூட்டில் பிராமணர்களை கொன்றது யார் எனத் தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக இதற்காக தனது தோள்களை தட்டிக் கொள்கிறது.

கான்பூரில் குஷி துபே என்பவருக்கு கடந்த வருடம் ஜூன் 29 இல் திருமணமானது. பிறகு ஒரு வழக்கில் கைதானவருக்கு ஒரு வருடம் கடந்தும் ஜாமீன் வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்படுகிறது.

இதை பார்த்து பிராமணர் சமுதாயமும் அமைதி காக்கிறது. பிராமணர்களான நீங்கள் விஷ்ணு மற்றும் பரசுராமரின் பரம்பரையை சேர்ந்தவர்கள். நீங்கள் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்.

உ.பி.யில் 13 சதவிகித பிராமணர்களும், 23 சதவிகிதம் தலித்துக்களும் உள்ளனர். இந்த இருவரும் ஒன்றிணைந்தால் 2022 இல் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் அமரும்.

எங்கள் கட்சி ஆட்சி செய்த போது மாநில அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பிராமணர்களை அமர்த்தி இருந்தோம். வேலை இழந்தவர்களையும், டெல்லியில் போராடும் விவசாயிகளையும் பாஜக புறக்கணிக்கிறது.

சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தது போல், ரவுடியிஸமும், மோசமான சட்டம் ஒழுங்கும் பாஜக ஆட்சியிலும் நீடிக்கிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே முடிவு கட்டு உபியை முன்னேற்ற செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

உ.பி.யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, நான்கு முறை ஆட்சி செய்திருந்தது. இக்கட்சி அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் தீவிரம் காட்டுகிறது.

இதற்காக, அங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள பிராமண சமூகத்தினருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அதிகமாகி உள்ளது. இதற்கு முன் தனது கடைசி ஆட்சியில் பிராமணர்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்துக்களின் வாக்குகளை பெற்று மாயாவதி முதல்வரானது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT