'ஈ-கோபாலா' செயலி மூலம் கால்நடைப் பெருக்கத்துக்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன என, டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பதிலளித்துள்ளார்.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று (ஜூலை 27) மக்களவையில், "பால் பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்தவும், கால்நடைகளைக் குறிப்பிட்டுக் கண்டறியும் வகையிலும், மத்திய அரசிடம், ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?" என, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்:
"செப்டம்பர் 2020-ல், ஈ-கோபாலா என்ற செயலி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கால்நடைப் பெருக்கத்துக்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாப்பதற்காகவும், அவற்றுக்குத் தரமான உணவுகள் கிடைப்பதற்காகவும், உரிய காலத்தில் தடுப்பூசி அளிக்கவும், இந்தச் செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈ-கோபாலா செயலியின் உதவியால், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும், விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும். தேசிய கால்நடைகள் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளன.16 கோடிக்கும் அதிகமான எருமை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச கால்நடைகள் பதிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில், கால்நடைகளுக்கான தரவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன".
இவ்வாறு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பதிலளித்தார்.