கோப்புப்படம் 
இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் நிலையைப் பார்த்தும், குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “2020 ஏப்ரல் 21-ம் தேதி முதல் 2021, ஜூலை 23-ம் தேதிவரை நாட்டில் கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து 6,855 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக குடும்பச் சூழல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உதவி செய்வதுதான் தீர்வு. இல்லாவிட்டால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் சீரான நிதியுதவித் திட்டம் என்பது பொருந்தாது. ஒவ்வொரு குழந்தைக்கும் சூழல் வேறுபடுகிறது.

கரோனா பெருந்தொற்றால் நாட்டில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு வந்துள்ளனர், பெற்றோரை இழந்துள்ளனர். தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆதரவற்ற நிலைக்கு வந்து, குழந்தை கடத்தலுக்கு இலக்காகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பிஎம் கேர்ஸ் நிதி கல்விக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கரோனாவால் பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் நலனுக்காக பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்த நீட்டிக்கப்படுமா?

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு 27 குழந்தைகள் மட்டுமே தள்ளப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு கூறியதைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற கணக்குகள் நம்பமுடியாததாக உள்ளன. இவ்வளவு பெரிய மாநிலத்தில் 27 குழந்தைகள் மட்டுமே கரோனாவால் பெற்றோரை இழந்துள்ளார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் விவரங்களைச் சேகரித்து தாக்கல் செய்யவேண்டும். இல்லாவிட்டால், உண்மையான கணக்கு குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டியதிருக்கும்” எனத் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி நாகேஸ்வர ராவ் தனது சொந்த மாநிலத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில், “இந்தக் குழந்தைகள் குறித்து மாவட்ட நீதிபதிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். 'சில நேரங்களில் குழந்தைகளிடம் இருந்து அச்சத்துடன் தொலைப்பேசி அழைப்புகள் வரும். வீட்டில் ஏதும் சாப்பிடவில்லை, எங்களைப் பாதுகாப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த குழந்தைகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலையில் விடக்கூடாது' என்று மாவட்ட நீதிபதிகள் கூறினர்'' எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் ஜூலை 23-ம் தேதிவரை 68,218 குழந்தைகள் கரோனாவால் பெற்றோரில் ஒருவரை குழந்தைகள் இழந்துள்ளனர் என்று என்சிபிசிஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர் கூறுகையில், “பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளில் பலர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களின் கல்வி தொடர்வதற்கு மாநில அரசு சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் மீண்டும் படிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தைகளைப் பராமரிப்போருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கிட வேண்டும். மாநில அரசும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியை உயர்த்தி வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT