கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.படம்: பிடிஐ 
இந்தியா

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு; கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வானார்: பெங்களூரு ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்கிறார்

இரா.வினோத்

கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனும், எடியூரப்பாவுக்கு நெருக்கமானவருமான பசவராஜ் பொம்மை (61) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்கிறார்.

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அஷ்வத் நாராயண், லட்சுமண் சவதி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்டோர் பதவியை கைப்பற்றுவதற்கான காய் நகர்த் தல்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மேலிடம் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோரை பெங்களூருவுக்கு அனுப்பியது. பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று மாலை 7.30 மணிக்கு தர்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடங்கியதும் மூத்த எம்எல்ஏக்கள், எடியூரப்பா அமைச்சர வையில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மையின் பெயரை முதல்வராக முன்மொழிந்தனர். இதை பெரும்பான்மை எம்எல்ஏக்களும், மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

மகிழ்ச்சி அடைந்த பசவராஜ் பொம்மை, மேலிட தலைவர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, அருண் சிங் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். கர்நாடகாவின் புதிய‌ முதல்வரை தேர்வு செய்ய இழுபறி ஏற்படும் என செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் கூட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 15 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்றது.

பிரதமர் மோடிக்கு நன்றி

புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் பசவராஜ் பொம்மை பேசும்போது, ‘‘எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமர் மோடி, மூத்த‌ தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ''நாங்கள் ஒருமனதாக பசவராஜ் பொம்மையை தேர்வு செய்துள்ளோம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை வழிநடத்தும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமரின் அறிவுரையை பின்பற்றி பசவராஜ் பொம்மை சிறப்பான ஆட்சியை வழங்குவார்'' என்றார்.

எடியூரப்பாவின் ஆதரவாளர்

கடந்த 1988-89 காலக்கட்டத்தில் கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை 28.1.1960-ல் ஹாவேரியில் பிறந்தார். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர் புனேவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை ஜனதா கட்சியின் சார்பில் முதல்வரானதை தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டினார். அதை தொடர்ந்து ஜனதா கட்சியின் சார்பில் முதல்வரான ராமகிருஷ்ணஹெக்டே, ஜே.ஹெச்.படேல், தேவகவுடா ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஜனதா கட்சியில் இருந்து விலகிய பசவராஜ் பொம்மை கடந்த 2008-ம் ஆண்டில் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். லிங்காயத்து வகுப்பை சேர்ந்த இவர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவராக வலம் வந்தார்.

இவர் 2 முறை சட்டமேலவை உறுப்பின ராகவும், 3 முறை ஷிகான் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ​கடந்த 2008-ல் எடியூரப்பா அமைச்சரவயில் நீர்வளத்துறை அமைச் சராக பதவி வகித்தார். 2019-ல் எடி யூரப்பா மீண்டும் முதல்வரானபோது பசவராஜ் பொம்மை சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

3 துணை முதல்வர்கள்

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டதும் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார்.

இதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்கிறார். அவரோடு 3 துணை முதல்வர்களும் பதவியேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT