இந்தியா

காஷ்மீர் கலாச்சாரத்துக்கு எதிரானது வன்முறை: குடியரசுத் தலைவர் ராம்நாத் உரை

செய்திப்பிரிவு

வன்முறை காஷ்மீர் கலாச்சாரத்துக்கு எதிரானது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குவருகை தந்தார். இந்நிலையில் நேற்று, காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

காஷ்மீரை பூமியின் சொர்க்கமாக பார்க்க வேண்டும் என்பதே எனது கனவாகும். இந்தக் கனவுவிரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். இந்தியாவின் மணிமகுடமாக அதற்குரிய இடத்தை பெற வேண்டிய கட்டாயத்தில் காஷ்மீர் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் இளம் தலைமுறையினருக்கு இந்தக் கனவு விரைவில் நனவாகும்.

காஷ்மீரில் அன்றாட நிகழ்வாகவன்முறை இருப்பது துரதிருஷ்டவசமானது. காஷ்மீர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக வன்முறை ஒருபோதும் இருந்ததில்லை. இதுகாஷ்மீர் கலாச்சாரத்துக்கு எதிரானது. இந்த தற்காலிக மாற்றம் உடலை தாக்கும் வைரஸை போன்றது. இது அகற்றப்பட வேண்டும். காஷ்மீர் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்கு புதிய தொடக்கமும் உறுதியான முயற்சிகளும் தொடங்கியுள்ளன.

உங்கள் எதிர்காலத்தையும் இப்பகுதியின் அமைதியான மற்றும் வளமான வருங்காலத்தையும் கட்டமைக்க ஜனநாயகம் அனுமதிக்கிறது. இதை கட்டமைப்பதில் குறிப்பாக இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பங்குள்ளது. காஷ்மீரை மறு கட்டமைக்கும் இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT