உயிர் காக்கும் 76 வகை மருந்துகளின் இறக்குமதி வரிச் சலுகையை மத்திய அரசு அண்மையில் வாபஸ் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலையீட்டின் பேரில் இந்த உத்தரவை திரும்பப் பெற மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி ஓர் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதில், வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளில் பலவற்றுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் 76 வகைகளுக்கான விலக்கை ரத்து செய்வதாகவும் கூறியிருந்தது. இவை எய்ட்ஸ், புற்றுநோய், ஹேமோபிலியா, சிறுநீரக கல், இதய கோளாறு, நீரிழிவு நோய், எலும்பு சிகிச்சை, பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் ஆகும். இவை அனைத்தும் மிகவும் முக்கியமான உயிர் காக்கும் மருந்துகளாகக் கருதப்படுவதால், நிதி அமைச்சகத்தின் இந்த உத்தரவு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிகவும் பாதிக்கும் என கருதப்பட்டது. இவைகளுக்கு கிடைத்து வந்த 22 சதவீத வரிச் சலுகையினால் இந்த மருந்துகள் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனங்களால் ஏழைகளுக்கு இலவச மாகவும், மற்றவர்களுக்கு குறைந்த விலையிலும் கிடைத்து வந்தது.
இது குறித்து பிரதமர் மோடி மற்றும் சுகாதார நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டன. சில தனியார் மருந்து நிறுவனங்களின் தலைவர்கள் அந்த இறக்குமதி வரிச் சலுகை விலக்கினால் ஏற்படும் பாதிப்பை தம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தனர். இவற்றை மிகவும் கூர்ந்து கவனித்த பிரதமர் மோடி, நிதி அமைச்சக முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்து நிதி அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ற சுகாதார நலத்துறை அமைச்சகம், தன் செயலாளர் பி.பி.சர்மா தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதில் இணைச் செயலாளர்கள் அன்ஷு பிரகாஷ் மற்றும் கே.எல்.சர்மா, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் தனியார் மருந்து நிறுவனங்கள் சிலவற்றின் சார்பிலானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவின் நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் நேரடியாகத் தன் மேற்பார்வையிட்டு வருகிறது. அக்குழுவின் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 76-ல் எந்த மருந்துகளுக்கு மீண்டும் வரி விலக்களிக்கலாம் என ஆலோசனை செய்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழுவின் அறிக்கை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பிறகு மீண்டும் அந்த உயிர் காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்களிக்கப்பட்டு அதன் விலை முன்பு போல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக அதன் வரிவிலக்குச் சலுகையை ரத்து செய்த நிதி அமைச்சகம், இது குறித்து மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஏற்படும் பாதிப்பை உணர்ந்த பின் சுகாதார நலத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்க நிதித்துறை அமைச்சகம் தயாராகி விட்டதாகவும் கருதப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடியே இதில் நேரடியாக தலையிட்டிருப்பதும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.