கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் கியாசப்பூர் மற்றும் கொடகனஹள்ளி கிராமங்களை சேர்ந்த 17 பேர் மினி வேனில் அருகிலுள்ள சிக்ககொண்டஹள்ளி பாண்டுரங்க சுவாமி கோயில் திருவிழாவுக்கு சென்றனர். தேரோட்டம் முடிந்த பின், நேற்று அதிகாலை சொந்த ஊர்களுக்கு மினி வேன் மூலம் புறப்பட்டனர். அப்போது அதிகாலை 3.30 மணியளவில் அவர்களது வாகனம் மாடநாயக்கனகள்ளி அருகேயுள்ள திருவானூர் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த சரக்கு லாரி முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மினி வேன் மீது லாரி வேகமாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மினி வேனில் பயணித்த 3 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் உட்பட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மாடநாயக்கனஹள்ளி போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.