பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கல்வி நிறுவனங் களில் பயிலும் தலித் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர் களின் குறைகளைக் கேட்டறிந்து, அதை தேசிய அளவில் எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு பின் தலித் பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. ரோஹித் தற்கொலையை தொடர்ந்து ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர், தலித் சமூகத் தினரின் பிரச்சினையை தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண் டும் என்றார்.
இதற்கு பின், தலித் சமூகத்தின ரின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த ராகுல் விரும்புகிறார். இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவரான கோப்புல ராஜு, தங்கள் அணியின் மாநில நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதில், நாடு முழுதிலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தலித் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர் களின் குறைகளை கேட்கும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கு டெல்லியில் காங் கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது. இதில் உங்கள் மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ‘திஇந்து’விடம் கூறும்போது, “உ.பி.யில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தலித் சமூகத்தினரை கவரும் முயற்சியில் பாஜகவினர் இறங்கியுள்ளனர்.
இதை எதிர்கொள்ளும் வகையில் இந்தக்கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுபோல் மேலும் பல கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அமைப்பாளர்களாக கட்சி சார்பில் 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
காங்கிரஸின் இந்த நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக கருதப்படுகிறது.
உ.பி. உட்பட பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலையும் மனதில்கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸின் அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் தலித் பிரச்சினை பற்றி பேசுவதற்கு என தனியாக ஒரு அவை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோப்புல ராஜு ‘தி இந்து’விடம் கூறும்போது, “தலித்களின் பிரச்சினைகளை அறிவதற்காக டெல்லியில் அடுத்த மாதம் பெரிய அளவில் கருத் தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார். இது சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் வைத்து நடத்தப்படவில்லை” என்றார்.
இதனிடையே வரும் ஏப்ரல் 14-ல் லக்னோவில் நடைபெறும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.