டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் நாடாளுமன்றம் முன் போட்டி நாடாளுமன்றமத்தை நடத்தி வருகிறார்கள் இன்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சபாநாயகராக பஞ்சாபை சேர்ந்த ரண்தீர்சிங்கும், ,துணை சபாநாயகராக தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர்.பாண்டியனும் பொறுப்பேற்று நடத்தினர்.
இந்த போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பிஆர்.பாண்டியன் பேசியதாவது:
மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். மோடி அரசு போராட்டத்திற்கு மதிப்பளித்து வேளாண் சட்டத்தை திரும்பப்பெற மறுக்கிறது. அடிப்படை காரணம் சட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியவில்லை.
இச்சட்டத்தை இந்தியப் பெருமுதலாளிகள் தயாரித்து அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் தயங்குவதுடன், போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார்.
தேசவிரோதிகளாக சித்தரிக்க காவல்துறையைக் கொண்டு தேசவிரோத சட்டங்களை கொண்டு வழக்கு போட்டு ஒடுக்க நினைக்கிறார். விவசாயிகள், சட்டத்தை திரும்பப் பெற மறுக்கும் மோடிக்கு பாடம் புகட்டும் வகையில் வரும் மக்களவை தேர்தலில் விவசாயிகளே நாடாளுமன்றத்தை கைப்பற்றுவார்கள் என எச்சரிக்கும் விதமாக இங்கு நடத்தப்படுகிறது.
உதாரணமாக இச்சட்டத்திற்கு ஆதரவு தந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், அ.இ.அதிமுக கட்சியும் சட்டத்தை ஆதரித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கைவிட வலியுறுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு உதவ மறுக்கிற மோடி அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாயிகள் முடிவெடுத்து உற்பத்தியை நிறுத்தினால் பிரதமர் மோடியே உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம்.
கரோனாவிற்கு அச்சப்பட்டு மக்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி போல் விவசாயிகள் இருந்திருந்தால் மிகை உற்பத்தி ஆகி இருக்குமா? எனவே அதனை எதிர்கொண்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு விவசாய உற்பத்தியை பல மடங்கு உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.
நாட்டின் நலன் கருதி விவசாயிகள் செயல்படும்போது பெருமுதலாளிகள் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடியே உங்களுக்கு நாங்கள் நடத்துகிற நாடாளுமன்றத்தில் நேரில் விவாதிக்க தயாரா? என நாங்கள் சவால் விடுகிறோம்.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் முழு ஆதரவளிப்போம், பங்கேற்போம், தமிழக விவசாயிகள் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்ட செயலாளர மணி, வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா ரவிச்சந்திரன்,மாநகர செயலாளர் பழனியப்பன், உயர்மட்ட குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம் சேலம் மாவட்ட செயலாளர் பெருமாள்,தஞ்சை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.