கர்நாடக மாநில புதிய முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை. பாஜக சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு ஏகமனதாக எட்டப்பட்டது.
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகிய நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் தான் இந்த பசவராஜ் பொம்மை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 61. பசவராஜ் பொம்மை 2008ஆம் ஆண்டு தான் பாஜகவில் சேர்ந்தார். இவர் இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், எடியூரப்பா போலவே லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் இவர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பா விலகல் பின்னணி:
கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வந்தனர். அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.
எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறினார்.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
பின்னர் அவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை பாஜக தலைமை தொடங்கியது. கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை பாஜக குழு ஏகமனதாக பசவராஜ் பொம்மையை முதல்வராக தேர்வு செய்தது.