பிச்சை எடுப்பவர்கள் விரும்பி எடுப்பதில்லை, அதை வசதி படைத்தவர்கள் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது, பிச்சை எடுப்பதற்குத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கரோனா காலத்தில் டிராபிக் சிக்னல், சந்தைப் பகுதி, பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களைத் தடை செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “நாடு முழுவதும் உள்ள பிச்சை எடுப்பவர்கள், வீடில்லாதவர்கள், நிலையான இருப்பிடம் இல்லாதவர்கள் பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். அதேவேளையில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், ''பிச்சை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் அழுத்தமாகக் கோரிக்கை வைக்கிறார்? ஆனால், அவர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் எனத் தெரியுமா? அது வறுமையினால் வந்த விளைவு, படிப்பதற்கான வழியில்லாதது, வேலையின்மை, அதனால் வேறு வழி தெரியாமல் வாழ்வாதாரத்துக்காகப் பிச்சை எடுக்கின்றனர்.
எனவே, எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை, மாறாக வறுமையின் காரணமாகத்தான் ஒருவர் பிச்சை எடுக்கிறார். எனவே குறுகிய கண்ணோட்டத்திலும், வசதி படைத்தவர்களின் கண்ணோட்டத்திலிருந்து இதைப் பார்க்க விரும்பவில்லை
இது சமூக-பொருளாதாரப் பிரச்சினை. எனவே இவ்வாறு தடை விதித்து இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகத்தான் வேண்டும். எனவே பிச்சை எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இங்கே வைக்காதீர்கள். அந்தக் கோரிக்கைகையை ஏற்க முடியாது.
அதேவேளையில், பிச்சை எடுப்பவர்கள், வீடில்லாதவர்கள், நிலையான இருப்பிடம் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் வைத்த கோரிக்கையை ஏற்கிறோம். ஏனெனில் தற்போதைய நிலையில் இந்த மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, இது தொடர்பாக மத்திய அரசும், டெல்லி அரசும் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். வழக்கை இரண்டு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.