பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி வசூல் ரூ.5.57 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்

பிடிஐ

நடப்பு நிதியாண்டில் (2021-22) முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மத்திய அரசின் நிகர வரி வருவாய் 86 சதவீதம் அதிகரித்து, ரூ.5.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் பல்வேறு மாநிலங்களில் லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோதிலும் கூட மத்திய அரசின் வரி வருவாய் 86 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நடப்பு நிதியாண்டில் (2021-22) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மத்திய அரசின் நிகர நேரடி வரி வருவாய் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 783 கோடியாக இருந்தது. ஏறக்குறைய 109.03 சதவீதம் வரி வருவாய் வளர்ந்துள்ளது.

நிகர மறைமுக வருவாய் முதல் காலாண்டில், ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 398 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 862 கோடியாகவே இருந்தது. ஏறக்குறைய 70.சதவீதம் வரி வசூல் அதிகரித்துள்ளது.

இதன்படி, நிகர நேரடி வரி வசூல் ரூ.2.46 லட்சம் கோடியும், நிகர மறைமுக வரி வசூல் ரூ.3.11 லட்சம் கோடியாகவும் அதிகரித்து ஒட்டுமொத்தமாக முதல் காலாண்டில் வரி வருவாய் வசூல் ரூ.5.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான வரி செலுத்தாதவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு வரி செலுத்தும் பிரிவுக்குள் கொண்டுவரப்படுவார்கள்''.

இவ்வாறு சவுத்ரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT