‘குஜராத் இந்தியாவின் அங்கம் இல்லையா? அங்கு ஏன் தேசிய திட்டங்கள் அமல்படுத்தப் படவில்லை. நாடாளுமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ என உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், மதிய உணவு ஆகிய பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து தகவல் அளிக்கும்படி கடந்த மாதம் 18-ம் தேதி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, மகா ராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்க்கண்ட், பிஹார், ஹரியாணா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி இது குறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஸ்வராஜ் அபியான் என்ற என்ஜிஓ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்தார்.
அதில், ‘மாதம்தோறும் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்குவதை உறுதி செய்யும் தேசிய உணவு பாது காப்பு சட்டம் பல்வேறு மாநிலங் களில் முறையாக அமல்படுத்த வில்லை.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய பருப்பு வகைகளும், எண்ணெய் வகை களும் வழங்கப்படவில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பால், முட்டை சார்ந்த உணவுப் பொருட்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் சேதத்தால் பாதிப்படைந்த வேளாண்குடி மக்களுக்கு போதிய நஷ்ட ஈடும், அடுத்த பயிர் செய்வதற்கான மானிய உதவித் தொகையும் வழங்கப்படாமல் உள்ளன.
மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் நலன் சார்ந்த கடமைகளை முறையாக மேற் கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு தான் ஆபத்து ஏற்பட் டுள்ளது. அரசியல் சாசன பிரிவு 21 மற்றும் 14 வழங்கியுள்ள உரிமைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆகிய பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
‘‘நாடாளுமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது? குஜராத் இந்தியாவின் அங்கம் இல்லையா? தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் சொல்கிறது. ஆனால் குஜராத் அதை அமல்படுத்தவில்லை. இதை வைத்து எதிர்காலத்தில் இந்திய தண்டனை சட்டம், குற்ற வியல் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களையும் நடைமுறைப் படுத்த முடியாது என சில மாநிலங்கள் முரண்டு பிடித்தால் நாட்டின் நிலைமை என்னவாகும்? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, கடும் கண்டனம் தெரிவித்தனர்.
‘எனவே தேசிய திட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக அமல்படுத்தப் பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வரும் 10-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என மத்திய அரசுக்கு உத்தர விட்டனர். அத்துடன் இவ்வழக்கை யும் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.